திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.41 திருப்பைஞ்ஞீலி - திருக்குறுந்தொகை
உடையர் கோவண மொன்றுங் குறைவிலர்
படைகொள் பாரிடஞ் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
சடையிற் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர்க் கில்லை அவலமே.
1
மத்த மாமலர் சூடிய மைந்தனார்
சித்த ராய்த்திரி வார்வினை தீர்ப்பால்
பத்தர் தாந்தொழு தேத்துபைஞ் ஞீலியெம்
அத்த னைத்தொழ வல்லவர் நல்லரே.
2
விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக்
கழுது துஞ்சிருட் காட்டகத் தாடலான்
பழுதொன் றின்றிப்பைஞ் ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர் தம்வினை தூளியே.
3
ஒன்றி மாலும் பிரமனுந் தம்மிலே
நின்ற சூழ லறிவரி யானிடஞ்
சென்று பாரிட மேத்துபைஞ் ஞீலியுள்
என்றும் மேவி யிருந்த அடிகளே.
4
வேழத் தின்னுரி போர்த்த விகிர்தனார்
தாழச் செஞ்சடை மேற்பிறை வைத்தவர்
தாழைத் தண்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
யாழின் பாட்டை யுகந்த அடிகளே.
5
குண்டு பட்டுக் குறியறி யாச்சமண்
மிண்ட ரோடு படுத்துய்யப் போந்துநான்
கண்டங் கார்வயல் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
அண்ட வாணன் அடியடைந் துய்ந்தனே.
6
வரிப்பை யாடர வாட்டி மதகரி
உரிப்பை மூடிய வுத்தம னாருறை
திருப்பைஞ் ஞீலி திசைதொழு வார்கள்போய்
இருப்பர் வானவ ரோடினி தாகவே.
7
கோடல் கோங்கம் புறவணி முல்லைமேல்
பாடல் வண்டிசை கேட்கும்பைஞ் ஞீலியார்
பேடு மாணும் பிறரறி யாததோர்
ஆடு நாகம் அசைத்த அடிகளே.
8
காரு லாமலர்க் கொன்றையந் தாரினான்
வாரு லாமுலை மங்கையோர் பங்கினன்
தேரு லாம்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
ஆர்கி லாவமு தையடைந் துய்ம்மினே.
9
தருக்கிச் சென்று தடவரை பற்றலும்
நெருக்கி யூன்ற நினைந்து சிவனையே
அரக்கன் பாட அருளுமெம் மானிடம்
இருக்கை ஞீலியென் பார்க்கிட ரில்லையே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com